×

மதுரை மாநகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டுமானங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, அக். 9: மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டுமானங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவையும், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களையும் உருவாக்கவேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் நலச் சங்கத் தலைவர் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: மதுரை மாநகராட்சியில் தற்போது போதுமான அளவுக்கு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் இல்லை. காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன. திடக்கழிவு மேலாண்மை பணிக்கென தனி அலுவலர்கள் இருந்தாலும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களும் இந்த பணிகளில் ஈடுபட வேண்டுமென மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் காலியிடத்தால் பணிகள் பாதித்துள்ளன. எனவே, திடக் கழிவு மேலாண்மை திட்ட அரசாணைப்படி இதற்குரியவர்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்ளவும், எங்களை அந்த பணிகளில் ஈடுபடுத்தும் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மனு செய்திருந்தோம்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘‘பணி ஒதுக்கீடு என்பது நிர்வாக பொறுப்புடையது. இதை தனியுரிமையாக கோரமுடியாது. நிர்வாகம் சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மனுதாரர் தங்களது கோரிக்கை குறித்து சம்பந்தபட்டவர்களிடம் தான் முறையிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் லஞ்சம் அதிகளவில் உள்ளது. மாநகராட்சி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி சொத்துக்களை மீட்க வேண்டும். இதற்கு மதுரை மாநகராட்சியில் உள்ள லஞ்சம் மற்றும் கண்காணிப்பு பிரிவை பலப்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் விஜிலென்ஸ் மையங்களை திறந்து, சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். ரகசிய சோதனைக்காக சிறப்பு குழு அமைக்க வேண்டும். இவை மாநகராட்சி கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

மாநகராட்சி ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்து விபரங்களை மாநகராட்சி கமிஷனரிடம் தாக்கல் செய்ய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். ஆய்வில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டப் பணிகளை ஆய்வு செய்ய விஜிலென்ஸ் பிரிவில் சிறப்பு குழு அமைக்க வேண்டும். குழுவின் ஆய்வில் முறைகேடு தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். ஆனால், எங்கள் கோரிக்கை குறித்து எதுவும் உத்தரவிடவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:  மதுரை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. தற்போதைய சூழலில் பல நிலைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளன. இதற்கேற்ப இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியிடங்களை நிரப்புவது, புதிய பணியிடம் உருவாக்குவது குறித்து அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

மக்கள் தொகைக்ேகற்ப காலியிடங்களும், புதிய பணியிடங்களும் நிரப்பப்பட்டால் தான் சிறந்த நிர்வாகத்தை தரமுடியும். எனவே, சுகாதார ஆய்வாளர் பணியிடம் மட்டுமின்றி, அனைத்து நிலை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாநகராட்சி விஜிலன்ஸ் பிரிவை பலப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். ஆங்காங்ேக சிசிடிவி காமிரா பொருத்தி, விஜிலன்ஸ் பிரிவின் செயல்பாட்டை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். மாநகராட்சி கமிஷனரின் கட்டுப்பாட்டில் விஜிலன்ஸ் பிரிவு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் ஒரு அதிகாரியை நியமிக்கலாம். அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்கள் குறித்த சம்பந்தப்பட்ட பகுதிக்கு டூவீலர்களில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக சிறப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பான அவ்வப்போதைய கலந்தாய்வு கூட்டங்களை மாநகராட்சி கமிஷனர் தொடரலாம். எனவே, இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Icourt Branch ,workplaces ,Special Committee ,area ,Madurai Corporation ,infringement structures ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...