×

புற்றீசல்களாய் பெருகிவிட்டன பயிற்சி மையங்கள் முறைப்படுத்தப்படுமா?

பழநி, அக்.9: புற்றீசல்களாய் பெருகும் போட்டித்தேர்வு மையங்களை முறைப்படுத்த வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இயந்திரம் பழுதடைந்து விடாமல் தொடர் சங்கிலிபோல் தடையின்றி இயங்க வேண்டுமானால் அதற்கு அதிகாரிகள் ரத்தம் போன்றவர்கள். அரசு அதிகாரிகள் சரியாக இயங்கவில்லை என்றால் அரசாட்சியே ஸ்தம்பித்து விடும். அப்படிப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வாணையங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்துவிட்டால் ஊர் ஊருக்கு புதிது புதிதாய் பயிற்சி மையங்கள் தோன்றுகின்றன. மாணவர்களின் எதிர்கால கனவை முதலீடாகக் கொண்டு கல்லா கட்ட பயிற்சி மையங்கள் என்ற பெயரில் பல வியாபாரிகள் தோன்றுகின்றனர். போட்டித்தேர்வுகள் குறித்து புரிதல்கள் இல்லாததாலும், கல்வியியலில் முதல்தலைமுறையினர் என்பதாலும் ஏழை, எளிய மாணவர்கள் இதுபோன்ற பயிற்சி மையங்களை நாடுகின்றனர். நமது நாட்டில் பயிற்சி மையங்கள் துவங்குவதற்கு எந்த அனுமதியோ, பதிவோ தேவையில்லை என்ற நிலை உள்ளது. இதனால் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில்கூட புற்றீசல்கள் போல் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இம்மையங்களின் செயல்பாடுகள் மற்றும் உண்மைத்தன்மை குறித்து பெரும் ஐயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், குறிப்பாக மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்த பிறகு பயிற்சி மையங்கள் ஏராளமாக தோன்றி உள்ளன. தமிழக அரசு நீட் பயிற்சி மையம், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும், கிராம ஊராட்சிகளில் ஸ்டடி சர்க்கிள் என்றும் துவங்கி உள்ளது. இவை சரிவர இயங்காததால் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாடுகின்றனர்.

ஏராளமானோர் பணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் உள்ளனர். குடும்ப வருவாயில் மாதம் 20% இதுபோன்ற பயிற்சி மையங்களுக்கு செலவிடும் நிலை உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தடுக்க பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரங்களை தகுந்த ஆதாரத்துடன் பயிற்சி மையங்கள் வெளியிட வேண்டும். கல்வித்துறையிலோ அல்லது அரசிடமோ அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயிற்சி மையங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். ஆர்டிஓ தலைமையில் குழு அமைக்கப்பட்டு விதிமுறைகள் விதிக்க வேண்டும். பயிற்சி மையங்களை தமிழக அரசு உடனடியாக முறைப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

Tags : training centers ,
× RELATED உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க...