×

நவராத்திரி விழாவையொட்டி பொரி உற்பத்தி களை கட்டியது

உடுமலை, அக்.4: நாடு முழுவதும் தற்போத நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சரஸ்வதிபூஜை, ஆயுத பூஜை வரஉள்ளதால் பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர்கள் இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது வீடுகள், கோயில்கள், ஒர்க்ஷாப்கள், விசைத்தறி கூடங்கள், பின்னலாடை நிறுவனங்கள், கடைகள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அவல், பொரி, கடலை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் பிரசாதமாக சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம், பொரி வழங்குவர்.பண்டிகை கால பூஜை பொருட்களில் ஒன்றாக பொரி இடம் பிடித்துள்ளதால் தற்போது பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம், ஏரிப்பாளையம், செங்கப்பள்ளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொரி உற்பத்திக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து தேங்காய் பூ சம்பா என்ற ரக அரிசியை வாங்கி அவற்றை ஊற வைத்து அடுப்பில் பொரியாக வறுத்தெடுக்கின்றனர். நவராத்திரியையொட்டி ஒவ்வொரு பொரி ஆலைகளிலும் தினமும் ஒரு டன் அரிசியை பொரியாக வறுத்தெடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மூட்டைகள் கட்டி அனுப்பி வருகின்றனர்.55 பக்கா அளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.350க்கும், ஒரு பக்கா ரூ.10க்கும் மொத்த விலைக்கு கடைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு பக்கா பொரி ரூ.7க்கு விற்ற நிலையில் தற்போது விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பக்கா ஒன்றிற்கு ரூ.3 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பொரி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் பொரி ஆலை நடத்தி வரும் ராஜகோபால் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் நெல்லை ஊற வைத்து பொரி தயாரித்தோம். தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து அரிசி வாங்கி பொரி உற்பத்தி செய்கிறோம். ஒரே பிராண்ட் அரிசி என்பதால் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. பொரிக்கு வரி இல்லாவிட்டாலும் மூலப்பொருட்களாகிய அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உண்டு. இது ஒரு பண்டிகை கால வியாபார சீசன், ஆயுத பூஜை வரை விற்பனை நன்றாக இருக்கும். கடந்த ஆண்டு 500 மூட்டை ஆர்டர் கொடுத்த வியாபாரிகள் தற்போது 300 மூட்டை போதும் என கொள்முதலை குறைத்து கொண்டனர். விலைவாசி உயர்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்காவிற்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் கடைகளை சென்றடையும் போது ஒரு பக்கா பொரி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. தொழிற்கூடங்கள் பல வேலையின்றி மூடப்பட்டுள்ளதால் இந்த ஆயுதபூஜை எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பாக இருக்காது எனக் கூறும் வியாபாரிகள், பொரியே இந்த விலை விற்கிறது எனக் கூறி பொதுமக்களும் வாங்க மறுப்பார்கள் என காரணம் கூறுகின்றனர்.
 
பண்டிகை காலம் முடிந்த பின் தினமும் 500 கிலோ முதல் 600 கிலோ அரிசியை கொண்டு பொரி உற்பத்தி செய்வோம். ஆனால் நாளொன்றுக்கு ஒரு டன் அரிசியை பொரியாக வறுத்தெடுத்தால் மட்டுமே வேலையாட்களுக்கு கூலி கட்டுப்படியாகும். மத்திய, மாநில அரசுகள் இது போன்ற சிறு தொழில்கள் நசிந்து விடாமல் இருக்க பொரி அரிசிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என்றார். ஒரு டன் அரிசியில் 100 முதல் 150 மூட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. பொரி அடுப்பிற்கு தேவையான தென்னை மட்டைகள் சமீபத்தில் ஒரு டன்  ஆயிரம் ரூபாயில் இருந்து தற்போது ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் பொரியின் விலை உயர ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Tags : festival ,Navratri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...