×

மாவட்டத்தில் கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைப்பு

திருப்பூர், அக். 2:திருப்பூர், மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் மற்றும் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டு வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த மாதம் 13ம் தேதி கலெக்டரால் வெளியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு நகல் வழங்கப்பட்டது. பின்னர் அந்தந்த பகுதிகளில் அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தி வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது.

தாராபுரம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, திருப்பூர் தெற்கு தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என 9 வாக்குச்சாவடிகள் வேறு கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் வகையில் திருப்பூர் தெற்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 484 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ்,அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட முன்மொழிவுகள் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற அனுப்பப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : polling stations ,district ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...