×

விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவு

ஈரோடு, அக்.2:  ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை நாளை (3ம் தேதி) விநியோகிக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கடந்த 23ம் தேதி முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. நாளை (3ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார்.

அதன்படி, அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு ஏற்கனவே பாடப்புத்தகம், நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் நேற்று ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு கல்வி மாவட்ட  அலுவலர் முத்து கிருஷ்ணன் கூறியதாவது: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகள் 16 ஆயிரத்து 100 பேருக்கு சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாளை  வழங்கப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 17 ஆயிரத்து 565 பேருக்கு பாடப்புத்தகங்களும், 87 ஆயிரத்து 825 நோட்டுகளும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ், ஆங்கில பாடப்புத்தகம் 4 ஆயிரத்து 250 பேருக்கும், பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் ஆயிரத்து 50 மாணவ,மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பாடப் புத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Schools ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்