தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி உள்ளதா?

மதுரை, அக். 1: தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் காதக்கிணறு ஜாங்கிட் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் நேதாஜி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காதக் கிணறு ஜாங்கிட் நகரில் ஏராளமானோர் வீடு கட்டி குடியிருக்கிறோம். காவல் துறை மற்றும் பல அரசுத் துறையினர் தங்களது சேமிப்பில் பெரும் பகுதியை செலவிட்டு வீடு கட்டியுள்ளனர். இதை ஒட்டிய பகுதிகளும் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு குடியிருக்கும் ஒருவர் நிலத்தடி நீரை எடுத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார். ஏராளமான லாரிகள் மூலமும் தண்ணீர் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் கழிவுகள் தெருக்களில் ஓடுகிறது. இதனால் சாக்கடை உருவாகி கொசு மற்றும் பூச்சிகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாங்கிட் நகரில் செயல்படும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிலையத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிலையத்திற்கு உரிமம் உள்ளதா எனவும் மேலும் எத்தனை நாட்கள் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி உள்ளது என்பது குறித்து மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.மதுரை அருகே குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிலையத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தில் லாரிகளுக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான பைப் லைன் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் எடுப்பதற்கு உரிமம் உள்ளதா, அதன் கால அளவு என்ன என்பது குறித்து மதுரை கிழக்கு ஒன்றியம் இரணியம் கிராம பஞ்சாயத்து சிறப்பு அதிகாரி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ.19க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>