×

குஜிலியம்பாறை அருகே மழைநீர் தேக்கம் 10 கிராமமக்கள் போக்குவரத்து பாதிப்பு

குஜிலியம்பாறை, அக். 1: குஜிலியம்பாறை அருகே பாறைப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் 10 கிராமமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலர் சைக்கிள், டூவீலர்களில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். ஆளில்லா ரயில்வே கிராசிங் வழித்தடங்களில் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது, ரயில்கள் வருவது தெரியாமல் அசம்பாவித சம்பவங்கள் நடந்து உயிர்பலி ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ரயில்வே துறையினர் ஆளில்லா ரயில்வே கிராசிங் முற்றிலும் அகற்றப்பட்டு, அவ்வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, டி.கூடலூர்- திண்டுக்கல் இடையே ரயில் செல்லும் வழித்தடங்களில் 13க்கும் மேற்பட்ட ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை மிகவும் பள்ளமாக உள்ளதால், மழைநீர் முழுவதும் இப்பாதையிலேயே தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றுவதற்கு எந்த ஒரு வசதியும் ரயில்வே நிர்வாகம் செய்து தர நடவடிக்கை இல்லை. இதனால் டி.கூடலூர்- திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ரயில்வே சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதுபோல் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் புளியம்பட்டி- கூம்பூர் வழித்தடமான பாறைப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழித்தடத்தில் உள்ள பாறைப்பட்டி, வேலாயுதகவுண்டனூர், சீலமநாயக்கன்களத்தூர், ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி, ஆர்.பி.பள்ளபட்டி, குளத்துப்பட்டி, கருங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பாறைப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை வழித்தடத்தில் டூவீலர், கார் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மழைநீர் எவ்வளவு உள்ளது என தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து ரயில்வே துறை நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் இவ்வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சைக்கிள்களில் சென்று வருகின்றனர். இதனால் சுரங்கப்பாதை வழியே சைக்கிள்களை ஓட்டி செல்ல முடியாமல், தண்டவாளத்தில் தூக்கி வைத்து மிகவும் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். இதேபோல் டூவீலர்களில் செல்பவர்களும் தண்டவாளத்தை கடந்த செல்கின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்த மின்மோட்டார் அமைத்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : villages ,rain water stagnation ,Kujiliyambara ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்