×

ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து இலவச வீட்டுமனைக்கு வழங்கிய நிலம் மீட்பு

தர்மபுரி, அக்.1: தர்மபுரி அருகே, தனி நபர் ஆக்கிரமிப்பு செய்த இலவச வீட்டு மனை பட்டாவுக்கான 2.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தர்மபுரி வட்டம் உங்காரனஅள்ளி கிராம புல எண்:65ல், சுமார் 2.59 ஏக்கர் நிலம், ஆதி திராவிடர் நலத்துறையால், கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி, 78 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பயனாளிகளுக்கு வீட்டுமனை அளந்து காட்டப்படவில்லை. இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், 2017ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுத்ததை தொடர்ந்து, கோட்டாட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை பயன்படுத்தி, தனிநபர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், உங்காரனஅள்ளி பகுதியில் நேற்று நீல மீட்பு போராட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் டில்லிபாபு முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் ராமச்சந்திரன், வழக்கறிஞர் மாதையன், கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் குமார், விவசாயிகள் சங்க தலைவர் மல்லையன் மற்றும் அர்ச்சுனன், முத்து, சிஐடியூ நாகராஜன், நாகராசன், மாதர் சங்க ஜெயா, ஆதிதமிழர் விடுதலை கழக சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமிநாதன், சங்கு, மாரியப்பன், மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் கோவிந்தன், தாசில்தார் அன்பு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை மீட்டனர். மேலும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு, இலவச மனை பட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

Tags : land ,freeholder ,
× RELATED போராட்டம்