×

போதிய மருத்துவமனை வசதி இல்லாததை பயன்படுத்தி புறநகர் பகுதிகளில் தலைதூக்கும் போலி டாக்டர்கள்: விழிக்குமா சுகாதாரத்துறை?

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் போதிய அரசு மருத்துவமனைகள் இல்லாததால், இதை பயன்படுத்தி போலி டாக்டர்கள் தெருவுக்கு தெரு கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், இவற்றை தடுக்க வேண்டிய சுகாதாரத்துறை தூங்கி வழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழிற்பூங்கா, அரசு துறைகளின் தலைமை அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், பல்வேறு மாவட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவைக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். இதனால், சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளை நோக்கி மக்கள் புலம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தாம்பரம், மாடம்பாக்கம், மேடவாக்கம், மூவரசம்பட்டு, பூந்தமல்லி, போரூர், அனகாபுத்தூர், குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளும், இவற்றை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் மக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால், மேற்கண்ட பகுதிகளில் போதிய அரசு மருத்துவமனை வசதி இல்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தாலும், அவற்றில் டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.      
இதனால், ெபாதுமக்கள் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து கிராமங்களிலும் போலி டாக்டர்கள் கிளினிக் நடத்துவது அதிகரித்துள்ளது. மேல்நிலை, உயர்நிலைக் கல்வி மட்டுமே படித்து, ‘டிப்ளமோ இன் பார்மஸி’ முடித்து மருந்துக்கடைகளில் பணிபுரிந்தோர், தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாக பணிபுரிந்த பலர், தனியாக கிளினிக் வைத்து டாக்டர் தொழில் செய்து வருகின்றனர். எந்தெந்த நோய்க்கு, என்னென்ன மருந்து வழங்கலாம் என்பதை, தங்களின் தொழில் அனுபவத்தால் கற்று, தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். இந்த போலி டாக்டர்கள், புறநகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்கள், மருத்துவ வசதி இல்லாத கிராமங்களை குறிவைத்து கிளினிக் நடத்துகின்றனர்.

காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்களுக்கு, வீரியமிக்க மருந்துகளை வழங்கி, அவர்களை குணப்படுத்துவதால், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகி விடுகின்றனர். ஆனால், இதுபோன்ற வீரியம் மிக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும்போது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இத்தகைய போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சுகாதாரத்துறை தூங்கி வழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி டாக்டர்கள் குறித்து புகார்கள் அதிகரிக்கும் போது, ஆய்வு நடத்தி, சில போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் வேறொரு பகுதியில் கிளினிக் நடத்துவது தொடர்கிறது. மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட  ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரித்திகா (11) என்ற சிறுமி சில  தினங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்ததை தொடர்ந்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர  டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாங்காடு அடுத்த பட்டூர்  பகுதியில் சென்னை அசோக் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு  என்பவர் மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டாக கிளினிக் நடத்தி வந்தது  தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதையறிந்து அங்கிருந்து தப்பியோடி  விட்டார். புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களுக்கு தொற்று நோய் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, புநகர் பகுதிகளில் போதிய மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்தவும், ஆங்காங்கே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்கவும், மருந்து மாத்திரை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சுகாதார பணி சுணக்கம்
பொதுமக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவ குழுவை நியமித்து வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்கள் உருவாகுவதற்கான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் யாருக்காவது உள்ளதா என்பதை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வீடு, தொழிற்சாலை, நிறுவன வளாகங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தெருக்கள்தோறும் கொசு மருந்து அடிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் எதையும் சரியாக செய்வதில்லை,’’ என்றனர்.

சுகாதார பணி சுணக்கம்
பொதுமக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவ குழுவை நியமித்து வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்கள் உருவாகுவதற்கான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் யாருக்காவது உள்ளதா என்பதை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வீடு, தொழிற்சாலை, நிறுவன வளாகங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தெருக்கள்தோறும் கொசு மருந்து அடிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் எதையும் சரியாக செய்வதில்லை,’’ என்றனர்.

காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு  போன்றவைக்கு போலி டாக்டர்கள் வீரியமிக்க மருந்துகளை வழங்கி, விரைவில்  குணப்படுத்துவதால், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகி விடுகின்றனர்.  ஆனால், இதுபோன்ற வீரியம் மிக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும்போது பக்க  விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது

Tags : doctors ,hospital facilities ,suburbs ,health department ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...