×

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு பூதலூர் அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

தஞ்சை, செப். 29:காவிரி டெல்டாவில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் குறுவைக்காக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமான காலத்தை கடந்து ஒரு போக சாகுபடிக்கு அதாவது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து கல்லணையிலிருந்து 17ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் சேலம் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட வேண்டிய உய்யக்கொண்டான், கட்டளைமேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டது.
இதை விவசாயிகள் பலமுறை, பல வடிவங்களில் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சம்பா சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட விவசாயிகள் கண்டன குரல் எழுப்பினர்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பூதலூர் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 17 ஏரிகளுக்கு விவசாய பாசனத்திற்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தண்ணீர் திறந்துவிட்டார். இதன் மூலம் உய்யக்கொண்டான் முதல் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 12 ஏரிகளுக்கும், இரண்டாம் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 3 ஏரிகளுக்கும், மூன்றாம் நீட்டிப்பு வாய்காலிலிருந்து 2 ஏரிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2355 ஏக்கர் விவசாய சிலம் பாசன வசதி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : opening ,Poothalur ,Uyyakkondan ,
× RELATED சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா