×

அதிமுகவின் தலையாட்டி பொம்மையான என்.ஆர்.காங்.

புதுச்சேரி, செப். 30: அதிமுகவின் தலையாட்டி பொம்மையாக என்ஆர் காங்கிரஸ் தலைமை இருக்கக்கூடாது என்று முன்னாள் எம்எல்ஏ நேரு கூறினார்.  காமராஜர் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ நேரு களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரங்கசாமியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், கூட்டணி கட்சியினரை ஆலோசிக்காமல் நேரு எப்படி தனியாக போகலாம் என விமர்சிதார். இதனால் நேரு ஆவேசமடைந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து நேரு நிருபர்களிடம் கூறியதாவது: 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தவுடன் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்தனர். அதன்பின்னர் கட்சியின் செயல்பாடுகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது அனைவரையும் ஆலோசித்து நல்ல வேட்பாளரை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் கட்சி தலைமை முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. இது குறித்து கட்சி தலைவரிடம் கேட்டால் தேர்தல் வரட்டும், பார்க்கலாம் என்று கூறினார். கடைசி நேரத்தில் கட்சி பணிகளில் பழக்கம் இல்லாத இளைஞரை வேட்பாளராக நிறுத்தினார்.

ஆனால் மூத்த, அனுபவம் வாய்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். என்ஆர் காங்கிரசின் தோல்விக்கு கட்சி தலைமையின் அலட்சியம்தான் காரணம்.  இதனால் தற்போது கட்சி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கிடையே பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள், உண்மையான தொண்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கட்சியை வளர்த்து எடுக்க துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். மேலும் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறினார்கள். அங்கு வெற்றி பெற்றால்தான் 2021 தேர்தலில் கட்சி வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தனர். அனைவரும் கூறினால் போட்டியிடலாம் என்று அரைமனதாக முடிவு செய்தேன். மேலும் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு காமராஜ் நகர் தொகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். எனவே அத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். இதையடுத்து தேர்தலுக்கு தயார் செய்யும் நோக்கில் நல்ல நாளில் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்தேன்.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாவிட்டாலும் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகின்றன. முதலில் பாஜக தலைமை தாங்கள் போட்டியிடப்போவதாக நாடகம் நடத்தியது. அடுத்து அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடங்கி உள்ளனர். அதில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., கூட்டணி கட்சிகளை மதிக்காமல் ஓட்டு கேட்பதாக கூறியுள்ளார். நான் ஓட்டுச்சீட்டுகள் கொடுத்தா ஓட்டு கேட்டேன்? மக்கள் சேவகர் என்ற முறையில் மக்களை சந்திக்க எனக்கு உரிமையுள்ளது. வையாபுரி மணிகண்டனின் குற்றச்சாட்டை என்.ஆர்.காங்., தலைமை தட்டிக்கேட்கவில்லை. அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் என்.ஆர்.காங்கிரஸ் வழிநடத்தப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தால் அவர்களை ரங்கசாமி சந்தித்து பேசுவது இல்லை. ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் வந்தால் நேரம் ஒதுக்கி மணிக்கணக்கில் பேசுகிறார். என்னை குறை கூறும் அதிமுகவினரை ஒரு கேள்வி கேட்கிறேன். புதுச்சேரியில் மாநில செயலாளர் புருஷோத்தமனை மதிக்கிறீர்களா? கட்சி தலைமை அலுவலகத்தில்கூட அவரை வைத்து விழாக்களை நடத்துவது இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு டிடிவியிடம் ஆதாயம் தேடுனீர்கள், அடுத்து ஓபிஎஸ்சிடம் ஆதாயம் தேடுனீர்கள், அதற்கு அடுத்து இபிஎஸ்சிடம் ஆதாயம் தேடுனீர்கள். அதிமுகவிடம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

ஏற்கனவே தொகுதியில் நன்றாக வளர்ந்து இருந்தவர்கள்தான் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி அடைந்து, முதல்வராக ரங்கசாமி வருவதற்கு கை தூக்கினோம். நான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதுடன், 2006 தேர்தலில் சிறிது வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றேன். அதனால் தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு பலிகடா ஆவதை நான் விரும்பவில்லை. கட்சியில் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லையா? கூட்டணி கட்சியினரால், சொந்த கட்சியினர் அவமானப்படுத்தப்படுவதை கட்சி தலைமை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கக் கூடாது. என்.ஆர்.காங்கிரசை நம்பி வந்தவர்களை கைவிட்டு விட கூடாது. அதாவது கட்சி தொடங்கும்போது அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் வகித்து வந்த பதவிகளை துறந்து என்.ஆர்.காங்கிரசுக்கு வந்தனர். இதுபோன்ற நிலையில் கட்சி தலைமை இருந்தால் அவர்களின் நிலைமை என்ன? அதிமுகவின் ஒரே நோக்கம் ஆட்சி மாற்றம்தான். ஆனால் அதை என்.ஆர்.காங்கிரசார் விரும்பவில்லை. கட்சி தலைமை அதிமுகவின் தலையாட்டி பொம்மையாக இருக்கக்கூடாது. ரங்கசாமியின் விருப்பத்தை நிறைவேற்ற எவ்வளவோ பேர் உள்ளனர். அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ரங்கசாமி தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். என்னை யாரும் பணம் கேட்டு மிரட்ட முடியாது, பணம் கேட்டு கொடுக்க முடியாத சூழலிலும் நான் இல்லை. நம்பி வந்தவர்களை என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடுத்தெருவில் விட்டுவிடக் கூடாது. இதை கோரிக்கையாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...