×

திட்டக்குடியில் பரபரப்பு விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ₹2.5 லட்சம் நகைகள் கொள்ளை

திட்டக்குடி, செப். 30: திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராம மேலத்தெருவை சேர்ந்தவர் பூபதி, விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது வயலுக்கு சென்று தங்கினார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்ததுடன், பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி, ஆதிநாராயணன் என்பவர்களின் வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் அவர்களின் வீடுகளில் தங்க நகைகள், பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவங்களுக்காக இவ்வீடுகளின் அருகில் இருந்த மற்ற வீடுகளில் முன்பக்க கதவில் இருந்த தாழ்ப்பாள்களை பூட்டிவிட்டு கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர். காலையில் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே வர முடியாததால், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தாழ்ப்பாளை திறந்து வெளியே வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பூபதி கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2.5 லட்சம் இருக்குமென தெரிகிறது.

Tags : locker house ,
× RELATED திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக...