×

எங்கும் குண்டும் குழி, சேறும் சகதி... மழைக்கு சிதைந்த மாநகர் ரோடுகள்

மதுரை. செப். 26: மதுரை மாநகராட்சியில் சாலைகள் அனைத்தும் தொடர் மழைக்கு குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் மாறியுள்ளன. சீரமைக்க அதிகாரிகள் அக்கறை காட்டாததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். =மதுரை மாநகராட்சி 148 சதுர கி.மீ. பரபரப்பளவில் அமைந்துள்ளது. வாகன போக்குவரத்து உள்ளிட்ட மொத்த சாலைகளின் நீளம் 1,572 கி.மீ. இதில், 60 சதவீதம் சாலைகள் மாநகராட்சி பராமரிப்பிலும், 40 சதவீதம் சாலைகள் நெடுஞ்சாலை துறை பராமரிப்பிலும் உள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளன. நகரில் பாதாளச்சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. இதனால், மேலப்பொன்னரகம் 8வது ரோட்டில் இரண்டாக பிளந்து கிடக்கிறது. இதன் வழியாக பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் நடந்து செல்ல அஞ்சுகின்றனர்.  பெத்தானியபுரம் சர்ச் ரோட்டில் ஆட்களே நடக்க முடியவில்லை. இங்குள்ள பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மீனாட்சி அம்மன்கோயிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் சாலையை தோண்டி, புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், அந்த பகுதியில் சகதிமயமானது. வெளிவீதிகளில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் தளவாய் அக்ரகாரம், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, கீழமாசி, தெற்கு மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள் உள்ளிட்ட பல்வேறு வீதிகள், செல்லூர், தமிழ் சங்கம் ரோடு, ஆரப்பாளையம், புது ஜெயில்ரோடு, ஜெய்ஹிந்துபுரம், அரசரடி, காளவாசல், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், முனிச்சாலை, புதூர், டி,ஆர்.ஓ. காலனி சாலை, தபால்தந்திநகர், வண்டியூர் பூங்கா ரோடு உள்ளிட்ட பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழியுமாகி உள்ளன. இதனால், டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.  

7 கி,மீ. பறக்கும் பாலம் கட்டும் நத்தம் ரோடு மிக மோசமாக உள்ளது. ஊமச்சிகுளம் வரை குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில், டூவீலரில் செல்வோர் கொஞ்சம் அசந்தால் நடுரோட்டில்  சாய்த்து கீழே தள்ளிவிடும். மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து மூன்று மாவடி வரையிலான 120 அகல சாலை அகலப்படுத்தும் பணி, மேம்பாலம் கட்டும் பணி நடக்கும் பைபாஸ் ரோட்டில் காளவாசல் பகுதி, மூன்றுமாவடி முதல் அய்யர்பங்களா வழியாக ஆனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழையால் சகதியாக உள்ளது. மதுரா கோட்ஸ் மேம்பாலம், யானைக்கல், தெற்குவாசல், அண்ணாநகர் உள்ளிட்ட பல மேம்பாலங்களில் 10 அடிக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு முதுகுவலி, தோள்பட்டை வலி ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மழை பலமாக பெய்தால், வீதிகளில் பெருகும் வெள்ளம் வடிய முடியாமல் அடைபட்டு தெப்பமாக தேங்கி நிற்கிறது. இப்போதே இந்த கதி என்றால், அடுத்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவ மழையின்போது என்னாகும்? இதற்கு மாநகராட்சி என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையிலுள்ள இயந்திரங்கள் மூலம் பாழ்பட்டு கிடக்கும் பள்ளங்களை மட்டுமாவது மூடி ‘பேச்ஒர்க்’ செய்ய வேண்டும், மழை நீர் கால்வாய்களில் வடிய அடைப்புகளை இப்போதே அகற்ற தவறினால், 1994, 2005ல் ஏற்பட்டு வெள்ள பாதிப்பை மீண்டும் சந்திக்க நேரிடும்” என்றனர்.

Tags : roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...