×

அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள்

சிவகங்கை, செப். 21: சிவகங்கை மாவட்டத்தில் அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மற்றும் காரைக்குடியிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு நீண்டதூர பஸ்கள் இயக்கப்படுகிறது. மதுரை- தொண்டி, காரைக்குடி- மதுரை, திருச்சி- பரமக்குடி, சிவகங்கை- புதுக்கேட்டை, போன்ற ஊர்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கியசாலைகள் தற்போது இருவழி மற்றும் நான்கு வழிச்சாலையாக உள்ளன. இதனால் அதிவேகத்திலேயே தனியார் பஸ்கள் செல்கின்றன. பஸ்கள் அதிக வேகத்தில் செல்லும்போது திடீரென பிரேக் அடித்தல், முன்பு செல்லும் வாகனங்களை முந்துதல், கிராஸ் செய்தல் போன்றவற்றின் போது விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகள் தற்போது அதிகப்படியாக நடந்து வருகிறது. ஏராளமான விபத்து சம்பவங்கள் அதிவேகமாக செல்லும் பஸ்களால் ஏற்படுகிறது. எனவே தனியார் பஸ்களை அதிவேகத்தில் இயக்க போக்குவரத்து அலுவலர்கள் அனுமதி அளிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, ‘காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர் வழியாக மதுரை செல்லும் தனியார் பஸ்களில் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் உட்கார வேண்டும். எத்தனையோ முறை இவ்வளவு வேகமாக செல்ல வேண்டாம் என ஓட்டுனர்களிடம் தெரிவித்தால் எங்களுக்கு நேரம் அப்படித்தான் ஒதுக்கியுள்ளார்கள் என கூறுகின்றனர். பஸ்ஸ்டாண்டில் ஒவ்வொரு பஸ்களுக்கும் சில நிமிட நேரமே ஒதுக்கப்படுவதால் இவ்வாறு அதி வேகமாக பஸ்களை இயக்குவதாக கூறப்படுகிறது. அதற்காக பயணிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் அதிவேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது