×

காட்டுமன்னார்கோவில் இசேவை மையத்தில் ஆதார் திருத்தத்துக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிப்பு

காட்டுமன்னார்கோவில், செப். 26: காட்டுமன்னார்கோவில் இசேவை மையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தத்திற்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலக வளாகத்தில் பொது இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய ஆதார் பதிவு, ஆதார் திருத்தம் ஆகிய சேவைகளுக்காக தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சர்வர் பிரச்னை, இணைய முடக்கம் போன்ற காரணங்களால் இ சேவை மையம் அடிக்கடி செயல்படாமல் போகின்றது. இணையம் செயல்பாட்டில் இருக்கும் சமயங்களில் காலை 10 மணி முதல் 10.30 வரை சுமார் அரைமணி நேரம் வரை சேவைக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றது. இந்த 60 நபர்களுக்கான அப்டேட் சேவை மாலை 4 மணிவரை நடைபெறும். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் கிராமப்பகுதிகளில் இருந்து நீண்டதூரம் பயணித்து வரும் பொதுமக்கள் மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து ஆதார் திருத்தத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பெண்களிடம் கேட்டபோது, 10 மணிக்கு திறக்கப்படும் சேவை மையத்திற்காக காலை 8 மணிமுதலே வரிசையில் காத்துகிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் இதனால் பெறும் இன்னலுக்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நபர்களுக்குமேல் முன்பதிவு செய்யப்படுவதில்லை. சுமார் 3 முதல் 10 நாட்கள் வரை காத்திருந்தால் மட்டுமே ஆதார் சேவை கிடைக்கப்பெறுகின்றது. எனவே கூடுதல் பணியாளர்கள், இயந்திரங்கள், கணினி ஆபரேட்டர்களை பணியமர்த்தி பொதுமக்களுக்கு முறையான சேவை வழங்க வேண்டும் என கூறினர்.

Tags : Adar ,Katumannarko ,Isevai center ,
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...