அரவக்குறிச்சி, செப். 26: அரவக்குறிச்சியில் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் கரையோரம் காடு போல வளர்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களில் மழை நீர் தேங்கி ஏரளாளமான கொசு உற்பத்தியாகி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை எற்படுத்துகின்றது. சீமைகருவேல முட்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை புங்கம்பாடி சாலை நங்காஞ்சி பலத்திற்கு மேற்கு கரையில் உள்ளது. மருத்துவமனையின் பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் எங்கு பார்த்தாலும் சீமைகருவேல முட்புதர்கள் மண்டி நங்காஞ்சி ஆறே தெரியாத அளவிற்கு சீமைகருவேல முள் மரங்கள் வளர்ந்து உள்ளது.இதனால் மழைநீர்,சாக்கடை மற்றும் கழிவு நீர் அனைத்தும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பன்றிகள் தேங்கியுள்ள சாக்கடை நீரில் மூழ்கி விளையாடுகின்றன. இதனால் நோய் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெரும் உள் நோயாளிகள் கொசுக்கடியினால் அவதிப்படுகின்றனர். அரவக்குறிச்சி தெற்கே குமரண்டான்வலசு ஈஸ்வரன் கோயிலில் இருந்து கரடிபட்டி வரை நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையயோரம் போலீஸ் குவார்ட்டர்ஸ், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. மக்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகிலேயே உள்ள அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் சீத்த மர முட்புதர்களில் தேங்கி நிற்கும் மழை நீர்,சாக்கடை மற்றும் கழிவு நீரினால் துர்நாற்றம் ஏற்படுகின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து துன்புறுத்துகின்றது.
நங்காஞ்சி ஆற்றில் சீத்தை முட்கள் காடு போல வளர்ந்து அதிக அளவு முட்புதர்களாக உள்ளதால் அப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகள், வீடுகளிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவைகளின் ஆற்றில் காடு போல் வளர்ந்துள்ள சீத்தை கருவேல மரங்களின் வேர்கள் பூமிக்குள் ஊடுறுவிச் சென்று நீர் ஆதாரங்களை அழிக்கின்றன. இதனால் இப்பகுதியில் எதிர் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை எற்பட வாய்ப்புள்ளது என்றும், சுற்றுப் பகுதியில் உள்ள முருங்கை உள்ளிட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கும் என இப்பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர். நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வேறுடன் முற்றிலுமாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஆற்றோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். அரவக்குறிச்சி பகுதி நங்காஞ்சி ஆற்றில் கிடக்கும் சீமைகருவேல முட்புதர்ககளை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.