×

2030ம் ஆண்டுக்குள் மனிதர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும்

சேலம், செப்.25: இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் 2023ம் ஆண்டுக்குள், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவார்கள் என அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் சார்பில், பிளாஸ்டிக் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அம்மாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் நிறுவன தலைவர் பூபதி தலைமை வகித்தார். திருஞானம், அழகிரிநாதன், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். இதில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்க, குப்பை தொட்டிகளே இல்லாத மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகளை,வீட்டிலேயே உரமாக்கும் வழிமுறையை மாநகராட்சி அறிவிக்க வேண்டும். அரசுடன் இணைந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் செயல்பட்டால் தான் இதை சாத்தியமாக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் சார்பாக நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும். இதன்மூலம், நிலவில் செயற்கைக்கோளை தரையிறக்க கூடிய நான்காவது நாடாக இந்தியா திகழும். விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட  தொழில்நுட்பக் கோளாறின் காரணங்களை கண்டறிந்து, அதை சரி செய்து சந்திராயன் 2 அல்லது அதற்கு அடுத்த செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி  பெறுவதற்கான திறன் இஸ்ரோவிடம் உள்ளது. இதேபோல்,இந்தியா சார்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வரும் 2030க்குள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பொன்ராஜ் தெரிவித்தார். முன்னதாக, அம்மாப்பேட்டையில் உள்ள தெப்பகுளத்தை, பொன்ராஜ் பார்வையிட்டு அதிகளவு நீர் சேகரிப்பிற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

Tags : ISRO ,space ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...