×

தொடர் கன மழையால் 5 ஆண்டுக்கு பின் நிரம்பும் பிடமனேரி ஏரி

தர்மபுரி, செப்.25: தர்மபுரியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பிடமனேரி ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பிடமனேரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் பதிகால்பள்ளம், சோகத்தூர் ஏரியில் இருந்து நீர்வரத்து இருந்தது. ஏரியின் மூலம் பிடமேனரி, மொன்னையன் கொட்டாய், குள்ளனூர், தோக்கம்பட்டி, பரிகால்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தது. இதற்கிடையே பிடமனேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 2 ஆயிரம் வீடுகளின் கழிவுநீர் கலந்தது. இதனால், ஏரி மாசடைந்து துர்நாற்றம் வீசியது. சமீபத்தில் இந்த ஏரி தூய்மைப்படுத்தப்பட்டது. ஆனாலும் கழிவுகள் ஏரியில் வீசப்படுகிறது.  தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று நிரம்பும் நிலையில் பிடமனேரி ஏரி உள்ளது. இன்று நிரம்பி உபரிநீர் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடமனேரி ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்ப உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Bidamaneri Lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா