×

மழைநீர் வீணாக செல்வதை தடுக்க சூரம்பட்டி அணைக்கட்டு உயர்த்தப்பட்டது

ஈரோடு, செப். 25: மழைநீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் சூரம்பட்டி அணைக்கட்டு 59 செ.மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அதிக தண்ணீர் தேக்கப்பட்டு பாசனத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து வரும் கசிவுநீர் மற்றும் பெருந்துறை, செங்கோடம்பள்ளம், திண்டல், காரப்பாறை, வேப்பம்பாளையம், வில்லரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வாய்க்கால்கள் மூலம் வந்து ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர், இங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் மட்டுமே சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. மற்ற காலங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதி தாழ்வாகவும், வாய்க்காலின் மதகுகள் உயரமாகவும் உள்ளதால் அணையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டாலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஓடையில் சென்று வீணாகிறது. இதைக்கருத்தில் கொண்டு அணையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, சூரம்பட்டி தடுப்பணை தற்போது 59 செ.மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அணையில் அதிகமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரும்பள்ளம் நஞ்சை ஊத்துக்குளி பாசன பிரிவு தலைவர் தர்மராஜ் கூறுகையில், `சூரம்பட்டி அணைக்கட்டு பகுதி 9 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில், 5 ஏக்கரில் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. ஆனால், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வருவதில்லை. தடுப்பணையை உயர்த்தினால் மட்டுமே வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் என ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து 59 செ.மீட்டர் அளவிற்கு தடுப்பணை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்பயனாக, அரை டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கலாம் தற்போது தடுப்பணை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது’ என்றார்.

Tags : Surampatti ,dam ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்