×

உளுந்தூர்பேட்டையில் பலத்த மழை தண்ணீரில் தத்தளித்த மாவட்ட கல்வி அலுவலகம்

உளுந்தூர்பேட்டை,  செப். 25:  உளுந்தூர்பேட்டையில் பெய்த பலத்த மழையால் மாவட்ட கல்வி அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகள் தண்ணீரில் நனைந்து சேதமானது.உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று  முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை,  ஆசனூர், பாலி, மழவராயனூர், குன்னத்தூர், பாதூர், வெள்ளையூர், களமருதூர்,  புகைப்பட்டி, எறையூர், கூத்தனூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பெரும்பாலான  கிராமங்களில் இரவு 9 மணிக்கு  இடி, மின்னலுடன் துவங்கிய மழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் இரவு 9 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரமாக பெய்த மழையால் பொதுமக்கள்  தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ேமலும் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில்  சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.  உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் கந்தசாமிபுரம், உ.கீரனூர், மாடல்
காலனி,  உளுந்தாண்டார்கோயில், பாளைப்பட்டுதெரு, அண்ணாநகர் உள்ளிட்ட தாழ்வான  இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. உளுந்தூர்பேட்டை பேருந்து  நிலையத்தில் இருந்து பெட்ரோல் பங்க் வரையில் சாலையின் ஓரம் மழைநீர்  செல்வதற்கு போதிய வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையோரம் ஓடிய மழைநீர்  வட்டாட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வளமையம்,  மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்தது.

இதனால் மாவட்ட கல்வி  அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகள் மழைநீரில் நனைந்து  சேதமானது. இதனால் நேற்று காலை அலுவலக பணிகள் நடைபெறுவதில் கடும் சிரமம்  ஏற்பட்டது. பின்னர் பேரூராட்சி பணியாளர்கள் சென்று மழைநீரை அகற்றி சுத்தப்படுத்தினர். இதே போல் கெடிலம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றதால்  இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  உளுந்தாண்டார்கோயில் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் தற்போது தண்ணீர்  நிரம்பி வரும் நிலையில் ஒரு பகுதியில் உள்ள சிறிய மதகில் உடைப்பு ஏற்பட்டதால், நேற்று முழுவதும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள  வயல்வெளிப்பகுதிக்கு சென்றது. இதனால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மதகு உடைப்புகளை விரைந்து சரி செய்து தர  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : District Education Office ,Ulundurpet ,
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...