×

ஏனாமில் உள்ளதுபோல் துறைமுக வளாகத்தில் நீச்சல் குளம்

புதுச்சேரி, செப்.  25:  ஏனாமில் உள்ளதை போன்று புதுச்சேரியில் நீச்சல் குளம் அமைக்க வேண்டுமென ராஜீவ்காந்தி  மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமைப்பின் தலைவர் ரகுபதி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  புதுச்சேரி முற்றிலும்  சுற்றுலா நகரமாக மாறி அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினமும் வருகை தருகின்றனர். புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல அம்சங்கள் இருந்தாலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்படியாக கடற்கரையை ஒட்டி எங்கும் சுற்றுலாத்துறை சார்பில் நீச்சல் குளம் அமைக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் கடற்கரை சாலையை ஒட்டியோ, இந்திராகாந்தி விளையாட்டு திடல் வளாகத்திலோ நீச்சல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் பெயரளவுக்கு எல்லைப்பிள்ளைச்சாவடியில் நீச்சல் குளம் அமைக்க ஆராம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக 30  சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொதுவான சுற்றுலாத்துறை அமைச்சர் ஏனாம் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று அவர் கூறியபடியே, ஒரே தொகுதியான ஏனாம் தொகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 3 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 1 கோடியே 57 லட்சத்து 66 ஆயிரத்து 304 செலவில் நீச்சல் குளம் அமைத்துள்ளார்.ஆனால் 23 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி பிராந்தியத்துக்கு இதுநாள் வரை சுற்றுலாத்துறை சார்பில் நீச்சல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது. மேலும் கடற்கரையை ஒட்டிய பகுதியான புதுவையில்  நீச்சல் பழக அரசு சார்பில் நீச்சல் குளம் இல்லாததால், இளைஞர்கள் கடலில் மூழ்கி இறந்து வருகின்றனர்.பள்ளி விடுமுறை நாட்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. சுற்றுலா பயணிகளும் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஓட்டலை நாட வேண்டியுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் வண்ணம் துறைமுக வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்.  பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிக்கு இந்திராகாந்தி விளையாட்டு திடலில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்.

Tags : Swimming pool ,Yanam ,
× RELATED சில்லி பாயின்ட்…