×

குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்னறிவிப்பின்றி அடிக்கடி மூடப்படும் ஆதார் மையம்: மணலி மக்கள் அவதி

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 21வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மையம் உள்ளது. இங்கு மணலி மண்டலத்தில் உள்ள 7 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆதார்   அட்டைக்கான புகைப்படம் எடுப்பது, விலாசம் மாற்றம் போன்ற பணிகள் அந்நிறுவன அலுவலர்கள் மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலர்கள் காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை. மாலையிலும் சீக்கிரமாகவே அலுவலகத்தை மூடிவிட்டு சென்று விடுகின்றனர். புகைப்படம் எடுக்க  பொதுமக்கள் வந்தால் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர். மேலும், பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்காமல் மரியாதைக் குறைவாக அலுவலர்கள் பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நேற்று  ஒரு நாள் முழுவதும் ஆதார் எடுக்கும் மையம் திறக்கவில்லை. இதனால் ஆதார் கார்டு எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுபோல் பலமுறை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அலுவலகத்தை மூடி விடுகின்றனர். இதுகுறித்து மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தால் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத துறை அதனால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அதிகாரியிடம்  புகார் செய்யுங்கள் என்று கூறுகின்றனர், என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய ஆதார் அட்டை தங்கு தடையில்லாமல் எடுக்க அலுவலகத்தை முறையாக செயல்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஆரம்பத்தில் மணலி மண்டலத்தில் அனைத்து வார்டுகளிலும் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு இங்கு உள்ள  ஒரே ஒரு அலுவலகத்தில் மட்டும் ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள இந்த மணலி மண்டலத்தில் ஒரே இடத்தில் மட்டும் ஆதார் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மணலி மண்டலத்திலுள்ள இ-சேவை மையங்களிலும் அலுவலர்கள் சரியாக பணியை செய்வதில்லை.  எனவே உயர் அதிகாரிகள் இந்த ஆதார் எடுக்கும் மையம் மற்றும் இ-சேவை மையங்களை ஆய்வு செய்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அவர்களை கண்காணிக்க வேண்டும்” என்றனர்.

Tags : Aadhaar Center ,Manali ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்