×

அக்கா கணவரான ரவுடி பாம்பே சசியை தீர்த்துக்கட்டியதற்கு 15 ஆண்டுக்கு பிறகு எதிரியை வெட்டி கொலை ெசய்து பழிதீர்த்த மைத்துனர்

சென்னை: அக்கா கணவரான ரவுடி பாம்பே சசியை கொலை செய்த ரவுடியை, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து பழிதீர்த்த மைத்துனர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (37). ரவுடியான இவர் மீது கொலை மற்றும் அடிதடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் தற்போது புதுச்சேரியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சிந்தாதிரிப்பேட்டை ரவுடியாக சுற்றி வந்த பாம்பே சசியை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசன் வெட்டி கொலை செய்தார். இதற்கு பாம்பே சசி மைத்துனர் இமான் (எ) அரவிந்தன், தனது அக்கா கணவர் கொலைக்கு காரணமான தமிழரசனை கொலை செய்வேன் என்று 15 ஆண்டுகளுக்கு முன், தனது மாமா பாம்பே சசி சடலத்தின் மீது சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து தமிழரசன் சென்னை வீட்டிற்கு வருவதாக தகவல் கிடைத்ததும், இமான் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெரு மற்றும் லாசர் தெரு சந்திப்பில் காத்திருந்தனர். அப்போது தமிழரசன் வீட்டிற்கு நடந்து செல்லும்போது, மறைந்து இருந்த இமான் மற்றும் அவனது நண்பர்கள் தமிழரசனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தமிழரசன் ஓடினார். ஆனால் விடாமல் ஓட ஓட துரத்தி சென்று வெட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார். பின்னர் பொதுமக்கள் ஒன்று கூடுவதை பார்த்த இமான் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழரசனை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாதிரிப்ேபட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். இமான் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5 பேர் சரண்: தமிழரசனை ஓட ஓட விரட்டி கொலைசெய்த வழக்கில் இமான், அஜய், நவீன், விவேக், தாவித் ஆகியோர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
மற்றொாரு சம்பவம்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 75வது பிளாக்கை சேர்ந்தவர் ஜெகன் (24), ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி நகர் 68வது பிளாக் பகுதி வழியாக நடந்து சென்றபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர், ஜெகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், ஜெகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகன் இறந்தார்.

இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பாரதி என்ற பெண்ணுக்கும், ஜெகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை ஜெகன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஜெகனை, அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வெட்டி கொன்றதாக தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக நேற்று காலை 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Rowdy Bombay ,opponent ,death ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை