மாவட்டத்தில் தந்தி சட்ட நகல் எரித்து போராட்டம்

ஈரோடு, செப். 19:   இந்திய தந்தி சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட உயர்மின் கோபுர திட்ட எதிர்ப்பு விவசாயிகள் 43பேரை போலீசார் கைது செய்தனர்.   மத்திய, மாநில அரசுகள், பவர்கிரீட் நிறுவனமும் இணைந்து விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1885ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தந்தி சட்டத்தை அடிப்படையாக கொண்டு விவசாய விளைநிலங்களை வருவாய் துறையினர் கையகப்படுத்தி மின் வாரியத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்த தந்தி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் நேற்று தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

 இந்த அறிவிப்பின் படி, ஈரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி தலைமையில் விவசாயிகள் ஏராளமானோர் ஈரோடு மோகன்குமாரமங்கலம் வீதியில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் அருகே தந்தி சட்ட நகலை எரித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. ரயில் பாதை, சாலை அருகே என மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும். டவர் லைன் அமைக்கப்பட்டால், அவ்விடத்தில் பயிர் செய்ய முடியாது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நிலத்தின் மதிப்பு குறைந்து, விற்க கூட முடியாத நிலை ஏற்படும். இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா கண்டத்துக்கு 3ஆயிரத்து600 கி.மீ., துாரத்துக்கு, 1,600 கிலோ வாட் மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்கின்றனர். அதுபோல, இத்திட்டத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். விளை நிலங்களை அழிக்கும், தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் முன் போராட்டம் செய்வதற்காக ஊர்வலமாக சென்றபோது, ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, கைது செய்து வேனில் ஏற்றினர். இதில், ஒரு பெண் உட்பட 43பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: