×

கலெக்டர் அலுவலகம் முன் தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம்

தர்மபுரி, செப்.19: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், இந்திய தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்ட உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், விவசாயிகளின் நில உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும், 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தை கைவிடக் கோரி நகல் எரிப்பு போராட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மல்லையன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் தீர்த்தகிரி, நிர்வாகிகள் சக்திவேல், அன்பு, மகேந்திரன், பொன்னுசாமி, சின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தை கைவிடக் கோரி நகலை எரித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீ பிடித்த நகலை அணைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குமாரசாமிபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து மின் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்றினால் நிலத்தின் மதிப்பு குறையும், வீடு கட்டவோ தொழிற்கூடங்கள் அமைக்க முடியாது. மின் கதிர்வீச்சால் கேன்சர், கருச்சிதைவு, உயிரினங்களுக்கு மலட்டுத்தன்மை ஆபத்து உள்ளது என்று உலக சுகாதார நேரம் கூறியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையிலும் திட்டம், மாற்று வழியில் சாலையோரமாக கேபிள் மூலமாக கொண்டு செல்ல வழிவகை செய்யும்படி விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது, காவல்துறையை வைத்து மிரட்டுவது, பொய் வழக்கு போட்டு, கைது செய்து சிறையில் அடைத்தும் வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த சட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மிக மோசமான எடுக்கப்பட்ட நிலையில், காலாவதியாகிப் போன சட்டத்தை, மத்திய அரசு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது,’ என்றனர்.


Tags : Collector ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...