×

மாவட்டம் முழுவதும் 135 கண்மாய்களில் குடிமராமத்து பணி

மதுரை, செப்.17: மதுரை மாவட்டத்தில் 135 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இதனால் மழைநீர் வீணாகாமல் தேங்கும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கவும், மழைநீரை விரயமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் குடிமராமத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1829 பொதுப்பணித்துறை கண்மாய்கள் விவசாயிகளின் பங்களிப்போடு ரூ.499.70 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில், கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுது பார்த்தல், மறு கட்டுமானம், கலுங்குகளை பழுது பார்த்தல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல் ஆக்கிரமிப்பு அகற்றுதல், நில அளவை செய்து கண்மாய் எல்லை கற்களை நடுதல், சீமைக்கருவேல் முட்செடிகள் அகற்றுதல் இதர பணிகள் மேற்கொள்ள 135 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை விவசாயிகளின் பங்களிப்போடு ரூ.4312.05 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையும், பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மூலம் நியமன முறையில் செயல்படுத்தப்படுகிறது. கண்மாய் ஆயக்கட்டுதாரர்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இச்சங்கங்களில் உறுப்பினராக பதிவு செய்து இருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கீழநெடுங்குளம் கண்மாயில் ரூ.92.30 லட்சத்திலும், கொண்டமாரி ஓடை ரூ.28.40 லட்சத்திலும், வயலூர் கண்மாய் ரூ.39.80 லட்சத்திலும், சித்தாலங்குடி கண்மாய் ரூ.29 லட்சத்திலும், துருத்தி ஓடை கால்வாய் ரூ.20 லட்சத்திலும், தென்கால் கண்மாய் ரூ.80 லட்சத்திலும், மாடக்குளம் கண்மாய் ரூ.85 லட்சத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார மதுரை மண்டல தலைமைப்பொறியாளர் கிருஷ்ணன், செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர்கள் மொக்கையன், செல்வம், பொறியாளர்கள் மாயகிருஷ்ணன், மூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : district ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு...