×

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காமராஜர் பல்கலை. பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு தடை

மதுரை, செப். 10: பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக கடந்த 2013 முதல் பணியாற்றி வருபவர் கர்ணமகாராஜன். இவர் கேரள மாணவி ஒருவருக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல்ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக, கர்ணமகாராஜன் மீது அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், புகாருக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை, கடந்த பிப். 5ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆக. 22ல் துணைவேந்தர் தலைமையில் நடந்த அவசர சிண்டிகேட் கூட்டத்தில், பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து அறிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வை எதிர்த்து பேராசிரியர் கர்ணமகாராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

அதில், ‘‘பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு என் தரப்பு விளக்கத்தை கேட்க தவறி விட்டது. எந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை. அறிக்கையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டதில் குழப்பம் உள்ளது. இதுதொடர்பாக நான் அனுப்பிய நோட்டீசிற்கும் விளக்கம் தரவில்லை. என் மீதான குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான கட்டாய ஓய்வை ஏற்க முடியாது. எனவே, கட்டாய ஓய்வு செல்லாது என்பதால் அதற்கு இடைக்காலத்தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் பேராசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.ேவலுமணி, மனுதாரரின் கட்டாய ஓய்விற்கு இடைக்காலத் தடை விதித்தார். ேமலும், மனு குறித்து பல்கலைக்கழக பதிவாளர், சிண்டிகேட் குழு, விசாரணைக்குழு கன்வீனர், துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.

Tags : Kamarajar University ,retirement ,
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்