×

கொலக்கொம்பை பஜாரில் மதுக்கடை திறக்க கோரி மனு

ஊட்டி, செப். 10:குன்னூர் அருகேயுள்ள கொலக்கொம்பை பஜாரில் மீண்டும் மதுக்கடை திறக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் சிலர் மனு அளித்தது அதிகாரிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மதுக்கடைகள் வைக்க பொதுமக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் மதுக்கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து வாரம் தோறும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைத் தீர்ப்பு கூட்டத்திற்கு வந்து பொதுமக்கள் மனுக்களை அளித்து செல்கின்றனர். சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலக்கொம்பை பகுதியில் மதுக்கடை வைக்க கோரி சிலர் நேற்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனை கண்ட அதிகாரிகள் ஆச்சர்யமடைந்தனர். ஊர் பொதுமக்கள் சார்பில், உதயபிரகாஷ் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கொலக்கொம்ைப பஜார் பகுதியில் கடந்த 25 ஆண்டுக்கு மேலாக மதுக்கடை இயங்கி வந்தது. இந்த மதுக்கடை இருந்த கட்டிடம் ஓடு போட்ட கட்டிடமாக இருந்ததால், மதுக்கடை அகற்றப்பட்டது. இங்கு மதுக்கடை இல்லாத காரணத்தால், தொலைவில் உள்ள தூதூர்மட்டம் பகுதிக்கு சென்று மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டு மாடுகள் மற்றும் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது. பலர் விலங்குகள் தாக்கப்பட்டு காயம் அடைகின்றனர். கொலக்கொம்பை பஜார் பகுதியில் மதுக்கடை வைக்க இப்பகுதி மக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மேலும், ஏற்கனவே மதுக்கடை இருந்த இடத்தின் அருகிலேயே கான்கிரீட் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு மதுக்கடை வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் உதயபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Tags : liquor bar ,Colombo Bazaar ,
× RELATED விருதுநகர் அருகே மதுபான பாரில்...