திருச்சி, ஆக.28: திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்பு மனநல காப்பகத்தில் சேர்ப்பதற்கான மீட்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் அன்பாலயம் மனநல காப்பகத்தில் சேர்ப்பதற்காக மனநோயாளிகளை மீட்கும் வாகனத்தை திருச்சி கலெக்டர் சிவராசு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மீட்பு வாகனம் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ததில் 4 மனநோயாளிகள் என மனநல மருத்துவரால் உறுதி செய்யப்பட்டு அவர்களை மீட்டனர். அதேபோல மத்திய பஸ் நிலையத்தில் 3, மன்னார்புரத்தில் 1 என மொத்தம் 8 பேரை பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் நேற்று மீட்டு, மருத்துவ பரிசோதனை செய்து காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறான மீட்புப்பணிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மீட்புப் பணிக்கான உதவிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை மற்றும் காவல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றித்திரியும் மனநோயாளிகள் குறித்து பொதுமக்கள் அன்பாலயம் நிர்வாகி செந்தில்குமாருக்கு 944367607 என்ற எண்ணிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு 0431-2412590 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் (பொ) டாக்டர் கோபிநாத், மாவட்ட மனநலத்திட்ட மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி, தசைப்பயிற்சியாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
