×

நடக்காத வேலைக்கு விளம்பரம் வைத்து கரன்சிகளை சுருட்டிய இலை நிர்வாகிகளின் தில்லாலங்கடி வேலையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகரத்துல மக்கள் தைரியமாக புகார் கொடுக்க வர்றாங்களே, ஏதாவது விசேஷமா…’’ என சிரித்தபடியே விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தில் கோட்டையில் முடியும் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் பகிரங்கமாக நடந்து வந்ததாம். சமீபத்தில் அங்கு பணி புரிந்த ‘லேடி இன்ஸ்’ லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இதனால், இந்த காவல்நிலையம் மீது மக்களுக்கு மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளதாம். தற்போது, ‘போலீஸ் அலுவலக’ உதவி அதிகாரியானவர், இந்த காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களில் அதிகம் தலையிட்டு, புகார் தருபவர், எதிராளியிடமும் சமரசம் பேசி பெரிய அளவில் கல்லா கட்டுகிறாராம். இந்நிலையில், மாவட்ட காவல் தலைமையின் கீழ், தற்போது ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் விதி மீறுவோர் பட்டியலை ஒரு தனிப்படை சேகரித்து வருகிறது. மக்களுக்கான நம்பிக்கையை வளர்த்தெடுக்கவும், தவறு செய்பவர்களை கண்டறிந்து தண்டனை தருவதற்கெனவும் இந்த பட்டியல் தயாரிப்பை காவல் தலைமையின் தனிப்படை வேகப்படுத்தி இருக்கிறதாம். இதனால் புரோக்கர்கள், கரன்சி விளையாடுவது சற்று குறைந்துள்ளதாம். எனவே தான், காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முதலில் அச்சப்பட்ட மக்கள், காவல் தலைமையின் காசு இல்லா காக்கிகளின் நடவடிக்கையை பார்த்து புகார்களாக குவித்து வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடக்காத கல்யாணத்துக்கு பத்திரிகை அடிப்பதும், பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா அழைப்பிதழ் அடித்து உற்றார், உறவினர்களுக்கு அளிப்பதும் ஒன்று என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள்..’’ என்று புதிராக பேசினார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கீழ் அமைந்து வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக அந்த பகுதியில் இலை கட்சி ஆட்சியில் விளம்பர பலகை வைத்தாங்களாம். ஆனால், இந்த பணிகள் எங்கே நடந்தது என்பது தான் அப்பகுதி விவசாயிகளின் கேள்வியாம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து இந்தப் பணி நடந்ததா, போர்டு வைத்துள்ளார்களே என்று கேட்டால், இரண்டு விவசாயிகளும் விவரம் புரியாமல் விழிபிதுங்குகிறார்களாம். போர்டு அளவிலேயே இந்த பணிகள் இருப்பதால், ஒரு கோடியில் பணிகள் நடந்தும் பாபநாசம் அணையில் இருந்து திறந்த தண்ணீர் அந்த பகுதி விவசாயத்துக்கு வந்து சேரவில்லையாம். தண்ணீர் முழுவதும் கசிந்து வெளியேறி விட்டதாம். தூர் வார ஒதுக்கிய ஒரு கோடி ரூபாய் நிதி எங்கே போனது, ஆட்சி முடிவுறும் நேரத்தில் கால்வாயை தூர்வாரியதாக கூறி அரசு பணத்தை மோசடி செய்தவர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த வாகைகுளம், மன்னார்கோவில் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், முறைகேட்டுக்கு துணைபோன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளார்களாம்; கமிஷன் வாங்கிய இலை கட்சியினர், கான்டிராக்டர் ‘இடிந்து’ போய் உட்கார்ந்துள்ளார்களாம். போர்டு வைக்காம இருந்தா பிரச்னையே வந்து இருக்காது…நடக்காத பணிக்கும், பிறக்காத குழந்தைக்கும் விளம்பரம் வைத்தால் இப்படி தான் இடியாப்ப சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும் என்று நேர்மையான விவசாயிகள் பேசிக்கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விசுவாசம் நல்லா காட்டினா; கல்லா கட்டலாம் என்று சினிமாவை பற்றி சொல்லல… இலை கட்சியினருக்கு இன்னும் விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளை பற்றி கேட்கிறேன்…’’ என்று டாபிக்கை மாற்றினார் பீட்டர் மாமா. ‘‘சீதையின் நாயகர் பெயரிலான மாவட்டத்தின் 11 யூனியன்களிலும் வளர்ச்சிக்கென ‘துணை அதிகாரிகள்’ இருக்கின்றனர். ‘‘வளர்ச்சி’’, ‘‘ஊராட்சி’’க்கென இரு பிரிவுகளுடன், நூறு நாள் வேலை, சத்துணவு உள்ளிட்டவைகளுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஞ்சாயத்துகள் என ஒவ்வொரு யூனியனிலும் இவர்கள் இருக்கின்றனர். இத்துடன் மேலும், ஊராட்சி முகமை(வளர்ச்சிபிரிவு), உதவி இயக்குனர் அலுவலகம், தேர்தல் பிரிவு உள்ளிட்ட 10க்கும் அதிக பிரிவுகளிலும் இவர்கள் உள்ளனர். இந்த ‘‘துணை அதிகாரிகளில்’’ பெரும்பாலானோர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ‘‘சீட்டை’’ கவனித்து வருவதால், பழைய விசுவாசத்தில் இலைக்கட்சியினருக்கே விதிகளை மீறி ஒப்பந்தப் பணிகளைத் தருவது, அலுவலத்திற்கான புதிய திட்டங்கள், ஒப்பந்த பணிகள் என அத்தனையையும் வெளிப்படையாக தெரிவிப்பது என ‘‘ஓவர் விசுவாசம்’’ காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆளும் தரப்பினர் ஊடுருவலின்றி முறையாக பணிகள் நடந்து வரும் நிலையில், இலைக்கட்சியினருக்கான இவர்களில் சிலர் விசுவாசத்தோடு இன்னும் செயல்படுகிறார்களாம். கொஞ்சம் இந்த துணை அதிகாரிகளை ‘‘ஸ்கேன்’’ செய்து, முறைகேட்டிற்குரியவர்களை ‘‘களை’’ எடுத்து காத்திட வேண்டுமென சக ஊழியர்களே கோரிக்கை வைக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாம்பழத்துக்கும், காக்கிக்கும் ஏன் ஏழாம் பொருத்தம் கிளம்பியதாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்தில் உள்ள மாம்பழ கட்சி எம்எல்ஏ ஒருவருக்கும், சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தமாம். இந்த வகையில் அவர் லேடி இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது தெரிவித்துள்ள புகார் சர்ச்சையை கிளப்பி இருக்காம். தனது தொகுதிக்கு உட்பட்ட ஸ்டேஷன் ஒன்றில் பணியாற்றும் லேடி இன்ஸ்பெக்டர் குறித்து டிஐிபிக்கு புகார் ஒன்றை தட்டிவிட்டிருக்காராம் எம்எல்ஏ. அதில் ‘எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சீருடை அணியாத லாரி, வேன் டிரைவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, சந்து மதுக்கடை வசூல் போன்றவற்றை சுட்டிக்காட்டி லேடி இன்ஸ்பெக்டருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தேன். ஆனால், அவர் என்னை எம்எல்ஏ என்றும் பார்க்காமல் மரியாதைக்குறைவாக பேசுகிறார்,’ என்று குமுறி இருக்காராம். ஆனால் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டரோ, ‘அவர் பலமுறை என்னிடம் பேசியுள்ளார். நான் அவமதித்தது இல்லைஎன்றார். சர்ச்சைகள் கிளம்பினாலும் மக்கள் பிரச்னையாக இருந்தால் வரவேற்கலாம்.. ஈகோ பிரச்னைக்கு என்ன செய்வது என்று காக்கிகளும், மாம்பழ கட்சியினரும் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா….

The post நடக்காத வேலைக்கு விளம்பரம் வைத்து கரன்சிகளை சுருட்டிய இலை நிர்வாகிகளின் தில்லாலங்கடி வேலையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Dillalangadi ,Peter ,Dunga ,Thonga ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...