×

கிடப்பில் போடப்பட்ட தூள்செட்டி ஏரி கால்வாய் இணைப்பு திட்ட பணிகள்

பாலக்கோடு, ஜூன் 25:  தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தூள் செட்டி ஏரி கால்வாய் இணைப்பு திட்ட பணிகள் தொடங்காததால், விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர். பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அருகே தூள் செட்டி ஏரி அமைந்துள்ளது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஆழியாளம் என்ற இடத்திலிருந்து கால்வாய் வெட்டி, தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதன் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 50 ஏரிகளை நிரப்பும் திட்டம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், வெறும் அறிவிப்போடு இந்த திட்டம் நிற்பதால், பாலக்கோடு மற்றும் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன், சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் வெட்ட, முதல் கட்டமாக ₹76 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், இதுநாள் வரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. எனவே, இந்த திட்ட பணிகளை தொடங்க இனியும் கால தாமதம் செய்தால், அனைத்து விவசாயிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா