×

பெட்ரோல் பங்கை ஆட்டோ டிரைவர்கள் திடீர் முற்றுகை திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம், ஜூன் 25:  திருமங்கலத்தில் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் நகரில் ஓடும் பெருபாலான ஆட்டோக்கள் தற்போது காஸ் ஆட்டோக்களாக மாறி இயங்கி வருகின்றன. இவர்கள் தங்களது ஆட்டோக்களுக்கு எல்பிஜி காஸ் நிரப்ப நகரில் விருதுநகர் ரோட்டில் ஒரேயொரு பெட்ரோல் பங்க் மட்டுமே உள்ளது. இதனை விட்டால் மதுரை பசுமலை அல்லது விருதுநகர் சென்றுதான் காஸ் நிரப்பமுடியும். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக திருமங்கலம் பெட்ரோல் பங்க் இயங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ சங்க டிரைவர்கள் 50 பேர் ஆட்டோக்களுடன் விருதுநகர் ரோட்டிலுள்ள பங்க்கில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தனர். இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், விலையை கூட்டவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் இந்த பங்க்கில் 3 முதல் 4 நாள் காஸ் நிரப்ப மறுத்து வருகின்றனர். இதனால் நாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை நிரப்பமுடியவில்லை. இன்றும்(நேற்று) காஸ் நிரப்பும் கருவி பழுது என்கின்றனர். நாங்கள் இதற்காக பசுமலை செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் எரிபொருள் விரயமாகிறது என்றனர். இது குறித்து பங்க் நிர்வாகத்திடம் கேட்ட போது, மும்பை நிறுவனத்திலிருந்து இயந்திரங்கள் வாங்கியுள்ளோம். அது பழுதானதால் மும்பையிலிருந்து தாமதமாக வருவதால் காஸ் நிரப்ப முடியவில்லை என்றனர்.

Tags : blockade ,auto drivers ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்