×

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 21:  கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட 40 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ₹12 ஆயிரம் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், நேற்று காலை நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ளனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், குளிர்பான விற்பனை நிலையங்கள், பேக்கரி கடைகள், பழக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பிளாஸ்டிக் பொருட்கள், கோட்டிங் செய்யப்பட்ட வாழை இலை பேப்பர்கள், பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் என 40 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததாக, கடை உரிமையாளர்களுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ இனிவரும் காலங்களில் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும், இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் ஆணையர் எச்சரித்தார். ஆய்வின் போது, பொது சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : municipality ,Krishnagiri ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு