அரசு ஐடிஐயில் சேர 27ம் தேதி வரை அவகாசம்

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அரசு ஐடிஐகளில் சேர, வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி அரசு ஐடிஐ முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அரசு ஐடிஐயில், நடப்பாண்டு ஆகஸ்ட் 2019ம் ஆண்டு முதல் தொழிற் பிரிவுகளுக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களும், 14 வயது நிரம்பிய பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள்-2 வருடம் பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டடபட வரைவாளர், மின் பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டர் வண்டி, கம்மியர் டீசல் என்ஜின், கடைசலர், இயந்திர வேலையாள் மற்றும் பற்றவைப்பவர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து, கலந்தாய்வுக்கு வரும்போது, விண்ணப்பத்தின் சலான் மற்றும் அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு முதல்வர், தர்மபுரி அரசு ஐடிஐ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

× RELATED குளறுபடியால் கம்ப்யூட்டர் தேர்வு...