×

சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பரிதவிப்பு

புதுச்சேரி, ஜூன் 18: புதுவையில் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்தனர். குறிப்பாக வெளிமாநிலத்தில் இருந்து ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி பயிற்சி டாக்டர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கினர். இதையடுத்து தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அம்மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் டாக்டர்கள் ஒருநாள் (17ம்தேதி) போராட்டம் அறிவித்தனர். அதன்படி புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, எல்லைபிள்ளை சாவடி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து தங்களது மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து காலையில் ஒருமணிநேர தர்ணாவில் ஈடுபட்டனர். ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளை தள்ளி வைத்த டாக்டர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். அதேவேளையில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் வழக்கமாக பணிகளை மேற்கொண்டனர். இதேபோல் வெளிப்புற சிகிச்சை பிரிவிலும் முக்கிய சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது. அங்கு ஒருசில டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் சாதாரண மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிப்புற நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த போராட்டங்களை இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி தலைவர் டாக்டர் சீனிவாசன், பொதுச்செயலாளர் டாக்டர் சுதாகர் ஆகியோர் முன்னின்று வழிநடத்தினர்.

 இதுதவிர கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் சுகாதார நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையிலும் 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் பரிசோதனை கூடங்களில் டாக்டர்கள் பணியில் இல்லை. அவசர அறுவை சிகிச்சைகளை தவிர்த்து இன்றைய தேதியில் முன்கூட்டி குறிக்கப்பட்டிருந்த சிகிச்சைகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.  போராட்டத்தில் குதித்த டாக்டர்கள் அனைவரும் ஜிப்மர் வளாகத்தில் திரண்டு மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும், மருத்துவமனைகளில் உள்ள அவசர கிசிச்ைச பிரிவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...