×

கோட்டூர் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை உடனே துவக்க வேண்டும்

மன்னார்குடி, ஜுன் 14: திருவாரூர் மாவட்ட அனைத்து பாசன விவசாயிகள் கூட்டு இயக்கம் சார்பில் அதன் செயலாளர் சித்தமல்லி அண்ணாதுரை  கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தமல்லி, செரு களத்தூர், நொச்சியூர், கும்மட்டித் திடல் ஆகிய ஊராட்சிகள் பா மணியாற்றின் கடைமடை பாசன பகுதிகளாகும். இதில் ஒரு சில கிராமங்கள் கோரையாற்று பாசன பகுதிகளாகும். வெண்ணாற்றில் முறை வைத்து தண்ணீர் திறந்து விடும் போது சுமார் 750 கன அடி தண்ணீர் பாமணியாற்றில் விடப்படும். அதில் சேரன்குளம் போன்ற பகுதிகளில் தடுப்பணைகள் உள்ளன.

அவைகளில் தண்ணீர் பிரித்தளித்தது போக மீதமுள்ள சுமார் 200 கன அடி தண்ணீர் எங்கள் பகுதிக்கு வருகிறது. இந்த தண்ணீர் எங்கள் பகுதி விவசாயத்திற்கும் மற்றும் ஏரி, குளம், குட்டைகளில் நீரை தேக்கி வைக்கவும் போதுமானதாக இல்லை. கஜா புயல் பாதிப்பால் மரங்கள், மூங்கில் குத்துகள் வாய்க்கால்களில் விழுந்து நீர் வரும் பாதைகளை அடைத்து கொண்டு இருப்பதால் குறைந்த அளவு வரும் தண்ணீரையையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சித்தமல்லி, செரு களத்தூர், நொச்சியூர், கும்மட்டித் திடல்  ஊராட்சிகளுக்குட்பட்ட ஏரி, குளம், குட்டை மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரி ஆழப்படுத்தினால் மழை நீர் மற்றும் ஆறுகளின் வரும் உபரி நீரை தேக்கி விவசாயத்திற்கும், மக்கள் குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் கால்நடை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யலாம் . எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து   போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் பங்களிப்போடு கள ஆய்வு செய்து தூர் வாரும் பணிகளை விரைந்து துவக்கிட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Kottoor Union ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி