×

தண்டோரா போட்டு மலை கிராமங்களில் போலீசார் விழிப்புணர்வு

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்தில், கள்ளத்துப்பாக்கி ஒப்படைக்க தண்டோரா ேபாட்டு போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 4 கள்ளத்துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மலை மற்றும் வனக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், விளைநிலங்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை விரட்டவும் அனுமதி பெற்று நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளனர். மாவட்டத்தில், இவ்வாறு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 487 பயன்பாட்டில் உள்ளன.

ஆனால், முறையான உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகமுள்ளதாக, மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதனிடையே, கடந்த மாதம் ஒகேனக்கல் வனப்பகுதியில், வாலிபர் ஒருவர் கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பாப்பாரப்பட்டி அருகே, தனியார் வங்கி அதிகாரியை மர்ம கும்பல் கள்ளத்துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். தப்பியோடிய கும்பல் இதுவரை போலீசில் சிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட காவல்துறை, கள்ளத்துப்பாக்கிகளை தாமாகவே முன்வந்து ஒப்படைக்க மலைக்கிராமம் மற்றும் வனக்கிராமங்களில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் மாரண்டஹள்ளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமங்களில், தண்டோரா போடப்பட்டது. அப்போது, உரிமமின்றி வைத்திருக்கும் துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலோ ஒப்படைக்கலாம் என அறிவித்தனர்.

இதேபோல் பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு தாலுகா பகுதிகளில் உள்ளிட்ட மலை மற்றும் வனப்பகுதி கிராமங்களில், தண்டோரா போடப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் கூறுகையில், ‘கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை பாப்பாரப்பட்டி காவல்நிலைய எல்லையில் 2, மதிகோன்பாளையம் எல்லையில் 1, பஞ்சப்பள்ளி எல்லையில் 1 என 4 கள்ளத்துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்க இந்த மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை தாண்டி கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருந்தால் மலைக்கிராமங்கள், வனக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வேட்டை நடத்தப்படும்,’ என்றார்.

Tags : mountain villages ,Dandora ,
× RELATED மாதக் கணக்கில் இருளில் மூழ்கித்...