×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதி

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்திருக்கும் அவலம் உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதுதவிர 900 பேர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட டாக்டர்களும், 250க்கும் மேற்பட்ட செவிலியர்களும் பணியில் உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 58 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போதிய படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே பெட்டில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலமும் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகள் உள்ளதால், ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். இதனை தவிர்க்க, கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தரவேண்டும்,’ என்றனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் ஸ்ரீனிவாசராஜூ கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. மருத்துவமனையில் 800 படுக்கையில் இருந்து, தற்போது 1000 படுக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதாக இல்லை. இதனால் நோயாளிகளை தரையில் பாய் விரித்து படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் படுக்கை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ₹12 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி வரும் வாரம் தொடங்க உள்ளது. இதில் 200 முதல் 300 படுக்கை வரை அதிகரிக்க உள்ளோம்,’ என்றார்.

Tags : government hospital ,health patients ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...