தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 61,495 பயனாளிகளுக்கு ₹124 கோடியே 11 லட்சம் மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 தனியார் மருத்துவமனைகள் உள்பட 16 மருத்துவமனைகளில், இத்திட்டத்தில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரையிலும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ₹2 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை, காது குருத்தெலும்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1,051 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். கூடுதலாக 157 தொடர் சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கி உள்ளது. 163 சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் வகையான உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஆஞ்சியோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், மெமோகிராம் உள்ளிட்ட 38 வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யும் செலவுகளை ஈடுகட்டும் வகையிலும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த 11.01.2012 முதல் 31.05.2019 வரை, 61,495 பயனாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ₹124 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 170 செலவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், காப்பீட்டு அட்டை எடுக்கும் அலுவலகத்தில் உரிய முறையில் விண்ணப்பித்து, அடையாள அட்டைகள் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










