×

காரிமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

காரிமங்கலம், ஜூன் 13: காரிமங்கலம் அருகே மேக்கனாம்பட்டி கிராமத்தில், 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வரும் மக்கள், போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர். காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாயத்துக்களில், சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீரின்றி காட்சி பொருளாக மாறி விட்டன. பூமாண்டஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட மேக்கனாம்பட்டி கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், கடந்த 2 மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், சுமார் 3கி.மீ தொலைவு ெசன்று, ஒகேனக்கல் குடிநீர் குழாயின் கசிவுநீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மிகுந்த அவதிப்பட்டு வரும் பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மோதூர் மற்றும் பேகாரஅள்ளி பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர், ஆங்காங்கே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் பிரதான குழாயை உடைத்து, துளையிட்டு தண்ணீர் பிடிக்கின்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகிக்கப்படுவதில், மேக்கனாம்பட்டி கிராமம் கடைசியாக அமைந்துள்ளதாலும், பிரதான குழாயில் அழுத்தம் மிகவும் குறைந்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளது,’ என்றனர்.

Tags : Calimangalam ,
× RELATED காரிமங்கலம் அரசு மருத்துவமனையில்...