×

ரயான் நூலுக்கு தடை விதிக்க கூடாது

ஈரோடு, ஜூன் 13:   ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், பெரும்பாலான விசைத்தறி உரிமையாளர்கள் தங்களின் விசைத்தறிகளில் செயற்கை நூல் எனப்படும் ரயான் நூல்களை கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரயான் நூல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதிக இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தனியார் நூற்பாலைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நூல் தடை செய்யப்பட்டாலோ அல்லது அதிக  வரி விதிக்கப்பட்டாலோ ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரயான் துணி உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதுகுறித்து ஈரோடு விசைத்தறியாளர்கள் கூறியதாவது:ரயான் பஞ்சு தயாரிப்பதற்கான மூலப் பொருளை வெளிநாட்டில் இருந்து தனியார் நிறுவனங்கள் பெற்று, நூல் தயார் செய்து, தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ரயான் நூலுக்கு இங்கேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரயான் நூல், இந்தியாவில் கிடைக்கும் நூல் விலையை விட குறைவு.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூல்களை தடை செய்யவும், அதிக வரி விதிக்க வேண்டும் என தனியார் நூற்பாலை உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அரசும் பரிந்துரைக்க தயார் ஆகிவருவதாக கூறப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் விசைத்தறி தொழில் வாழ்நாள் முழுவதும் நூல் மில் உரிமையாளர்களுக்கு அடிமையாகவும், கூலிக்கு ஓட்டி தரும் சூழ்நிலை தான் உண்டாகும். எனவே, வெளிநாட்டில் இருந்து ரயான் நூல் இறக்குமதிக்கு தடை  விதிக்க கூடாது. இதனால் மூலம் விசைத்தறியாளர்கள் பயன்பெறுவார்கள்.

Tags : Ryan ,
× RELATED நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின்...