×

கோர்ட் உத்தரவிட்டும் பணி வழங்கவில்லை ‘108’ நிர்வாகத்தை கண்டித்து தர்ணா

மதுரை, ஜூன் 12: கோர்ட் உத்தரவிட்டும் 112 பேருக்கு பணி வழங்காத 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டித்து மதுரையில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் 955 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. முறையான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளாமல் இத்திட்டம் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவறு செய்ததாக கூறி 108 ஆம்புலன்ஸ் பைலட்கள் மற்றும் டெக்னீசியன்கள் என  112 பேரை, ஆம்புலன்ஸ்களை நிர்வகிக்கும் நிறுவனமான ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்தை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் இவர்களுக்கு பணி வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் 108 ஆம்புலன்ஸ் ஓர்க்கிங் யூனியன் அமைப்பினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நடந்த தர்ணா போராட்டத்திற்கு பைலட் வேதராஜ் தலைமை வகிக்க, டெக்னீசியன் குமார் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆம்புலன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில பொருளாளர் ஜெயக்குமார் கூறுகையில், `108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நிர்வகிக்கும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தினரால் பணிநீக்கம் செய்யப்பட்ட 112 பேரின் குடும்பம், பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது. மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்நிறுவனம் அமல்படுத்தாமல், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்துகிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து, எங்கள் காரிய கமிட்டி கூடி முடிவு செய்யும்’ என்றார்.     

Tags : court ,administration ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...