×

ஜூன் 25ல் தேரோட்டம் மதுரை மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி பேரையூரில் கலெக்டர் மனு வாங்குகிறார்

மதுரை, ஜூன் 12: மதுரை மாவட்டத்தில் 11 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இங்கு கிராம நிர்வாக அலுவலர்களின் வருவாய் கணக்குகளை சரிபார்க்க ஆண்டு தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும். இந்த ஜமாபந்தி ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இந்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்ததால், நடத்த முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், இன்று முதல் ஜமாபந்தி துவங்குகிறது.  ஜமாபந்தியில், கிராம நிர்வாக அலுவலர்களின் விவசாய நிலம், தரிசு, புறம்போக்கு நிலம், பட்டா உரிமையாளர் உள்ளிட்ட 22 வகையான கணக்குகள் சரிபார்க்கப்படும்.  

மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும். அதன்படி கலெக்டர் (பொ) சாந்தகுமார் இன்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பின்பு  வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தியில் பங்கேற்று மனுக்களை பெறுகிறார். மதுரை மேற்கு தாலுகாவில், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அமர்நாத் தலைமை வகித்து மனுக்களை பெறுகிறார். வடக்கு தாலுகாவில் மதுரை ஆர்டிஓ முருகானந்தம் பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். கள்ளிக்குடி தாலுகாவில் திருமங்கலம் ஆர்டிஓ முருகேசன், மதுரை தெற்கு தாலுகாவில் மேலூர் ஆர்டிஓ சிவகாமியும், திருமங்கலம் தாலுகாவில் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ரஞ்சித்குமார் ஆகியோர் மனுக்களை பெறுகின்றனர். திருப்பரங்குன்றம் தாலுகாவில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், மதுரை கிழக்கு தாலுகாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலரும், மேலூர் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரும், உசிலம்பட்டி தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரும் ஜமாபந்தியில் பங்கேற்று மனுக்கள் பெறுகின்றனர். இதில் அந்தந்த தாலுகா தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண உள்ளனர்.

Tags : Madurai District ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை