×

நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இயங்கி வந்த செயற்கை மணல் தயாரிப்பு இடம் அகற்றம் தாசில்தார் நடவடிக்கை

நாட்றம்பள்ளி, ஜூன் 12: நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இயங்கி வந்த செயற்கை மணல் தயாரிப்பு இடத்தை ஜேசிபி மூலம் அகற்றி தாசில்தார் நடவடிக்கை எடுத்தார். நாட்றம்பள்ளி தாலுகாவில் வெலக்கல்நத்தம், கொத்தூர், பச்சூர், மல்லப்பள்ளி, செட்டியேரி அணை, புதுப்பேட்டை, அக்ராகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு, பகலாக மணல் கடத்தல் நடப்பதாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா ஆகியோருக்கு புகார் வந்தது.

மணல் கடத்தலை தடுப்பது குறித்து தாசில்தார் தலைமையில் விஏஓ சரவணன் மற்றும் வருவாய்துறையினர் நேற்று காலை செட்டியேரி அணை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து வாகனங்கள் எதுவும் அணைக்குள் வராதபடி ஜேசிபி இயந்திரம் மூலம் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கிடையே கொண்டகிந்தணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேலூர் பகுதியை சேர்ந்த மோகன்(40) என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மண்ணில் செயற்கை மணல் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். தகவலறிந்த தாசில்தார், விஏஓ முனியப்பன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்று செயற்கை மணல் தயாரிக்கும் இடத்தை அகற்றினர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Tashildar ,land ,Natrampalli ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!