×

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததால் தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 12: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு கட்டிட வரைபடத்துடன் அனுமதி சான்று மற்றும் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை குறைக்க கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் நடந்த டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் கடந்த 26ம் தேதி திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது. புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் காலி பணியிடங்களில் புதிதாக அதிகரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் டாஸ்மாக் மேலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு கட்டிட வரைபடம் மற்றும் தீத்தடுப்பு கருவிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சேர்த்து திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர.

Tags : tasam shops ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...