×

சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க மெகா சைஸ் பள்ளங்கள் அமைப்பு

வில்லியனூர், ஜூன் 11: வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்பேரில் மணல் கொள்ளை நடக்கும் முக்கிய பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினர் சுழற்சி முறையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் தொடர்ந்து டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடப்பதாக தகவல் வந்ததன் பேரில் துணை தாசில்தார் நித்யானந்தம் நேற்று காலை அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள படுகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் அள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து மணல் அள்ள பயன்படுத்தப்படும் வழித்தடங்களை துண்டித்தார். இதுபோன்று அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் வழித்தடங்களை துண்டித்து வாகனங்கள் செல்லாதவாறு மெகா சைஸ் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணிகளின்போது கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் உடனிருந்தார்.

Tags : Sagaraparani ,
× RELATED சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள...