×

நகரில் முறைகேடாக இயங்கிய சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், ஜூன் 7: திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கிய 5 சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் சில சாய ஆலைகள் முறைகேடாக இயங்குவதாக மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 5 சாய ஆலைகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 5 சாய ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை பின்பற்றாமலும், முறைகேடாகவும் அந்த ஆலைகள் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குழாய் மூலம் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வந்ததும் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து இந்த 5 சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று 5 சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில் விநாயகம் கூறியதாவது: திருப்பூரில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபடும் சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறைகேடாக இயங்கும் ஆலைகள் தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : dyeing plants ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்