×

மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்ைக குறைவால் பள்ளிகள் மூடப்படும் அபாயம்

ஊட்டி, ஜூன் 7: நீலகிரி மாவட்டத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடி அருகில் இருந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களை கல்வித்துறை வற்புறுத்தி வருவதால் பெற்ேறார்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அரசு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். அதே சமயம், தற்போது ஆங்கில வழிக் கல்வி கற்றால் மட்டுமே வேலை வாய்ப்பு பெற முடியும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களும் ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்களை சேர்க்கின்றனர். பெற்றோர்கள் கூலித் தொழில் செய்தாவது தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்து வருகின்றனர். இதனால், நகர் புறங்களில் மட்டுமின்றி, தற்போது கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஒரு சில பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்களில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக, துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே சமயம், மற்ற பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களை போன்றே இப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பயிலும் துவக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை இறங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் இது போன்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு தற்போது மூடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 6 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊட்டி அருகேயுள்ள கன்னரிமந்தனை, கெத்தை, காந்திபுரம், தங்கடு ஓரநள்ளி போன்ற பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கல்வித்துறை அந்த பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ் வாங்க வற்புறுத்தியுள்ளனர். மேலும், அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பயிலவும் அறிவுறுத்தியுள்ளனர். அருகில் அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர். மேலும், இது போன்று மூடப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் வேறு பள்ளிகளில் பணியாற்ற இதுவரை அரசு உத்தரவு வழங்கவில்லை என்று நாள் தோறும் அவர்கள் கல்வித்துறை அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

வீட்டின் அருகே அரசு பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், எந்த பள்ளிகளில் சேர்ப்பது என புரியாமல் பள்ளிகளை தேடி அலைந்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதியும், ஏழை எளிய பெற்றோர்களின் நலன் கருதியும் மூடப்பட்ட துவக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ேமலும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : closure ,schools ,district ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...