×

அரசு வழக்குகளில் இருந்து லட்சுமிநாராயணன் எம்எல்ஏ விலகல்?

புதுச்சேரி, ஜூன் 7: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் தனக்கு அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். இருப்பினும் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான சிவக்கொழுந்துவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. மேலும் துணை சபாநாயகர் பதவிக்கு எம்என்ஆர் பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமிநாராயணனுக்கு சபாநாயகர் பதவி வழங்காததால் அதிருப்தியடைந்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து முதல்வரிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என லட்சுமிநாராயணனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் சமாதானம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுனரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் லட்சுமிநாராயணன் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. எப்போதும் வழக்கு விசாரணையின்போது நேரில் செல்லும் லட்சுமிநாராயணன் இந்த முறை டெல்லி செல்லவில்லை. இந்த வழக்கு மட்டுமின்றி புதுவை அரசு சார்பில் பல்வேறு வழக்குகளை லட்சுமிநாராயணன் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அதிலும் அவர் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் பதவி கொடுக்காததால், அதிருப்தி காரணமாகவே அவர் வழக்கு விசாரணையின் போது டெல்லி செல்லவில்லை என்று தகவல் பரவியுள்ளது. இருப்பினும் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டதால் முதல்வரே வழக்கை நடத்தலாம் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags : Lakshminarayanan MLA ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...