×

நிபா பரவுவதை தடுக்க புதுச்சேரியில் உஷார் நிலை

புதுச்சேரி, ஜூன் 7: கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் பரவாமல் தடுக்க உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகேவில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா நகரம் என்பதால் புதுச்சேரிக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கேரளாவில் ஏற்கனவே நிபா வைரஸ் தாக்குதலில் 17 பேர் இறந்துள்ள நிலையில், மீண்டும் அங்கு நிபா வைரஸ் பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில சுகாதாரத்துறை தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கேரளாவை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தின் மாகே பிராந்திய பகுதி அமைந்திருப்பதால் அங்கு மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. முககவசம், கையுறைகள் போதிய அளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், தலைவலியுடன் வரும் நோயாளிகளுக்கு மருத்துவக் குழுவினர் உரிய பரிசோதனைகளை செய்கின்றனர்.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலில் காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் சோர்வு இருக்கும். நோய் தாக்கியவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அது எளிதில் பரவி விடும். ஆகையால் நோயாளிகளிடம் பேசும்போது முககவசம், கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். வவ்வால் கடித்த பழங்களை உண்ண கூடாது. நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : spread ,Niba ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...